நேர்மையான கிராம நிர்வாக அதிகாரியை படுகொலை செய்த சமூக விரோத கும்பல்களை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் கொலை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் கொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது தூத்துக்குடி மாவட்டம் சூசைபாண்டியாபுரம் நேர்மையான கிராமநிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் நாடார் வயது(55) அவர்களை மணல் கடத்தல் கும்பல் பட்டப்பகலில் அவரது அலுவலகத்தில் புகுந்து படுகொலை செய்யப்பட்டார். இது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்கவுண்டர் செய்திடுக
மணல் கடத்தலுக்கு துணை போகாத அரசு அதிகாரியை அவரது அலுவலகத்தில் புகுந்து வெட்டிக் கொள்ளும் அளவிற்கு மணல் கொள்ளையர்களுக்கு யார் இந்த துணிச்சலை கொடுத்தது? தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் வாழவே முடியாதா என்று மக்கள் மனவேதனையில் துடிக்கிறார்கள் அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் அப்பாவி பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய சமூக விரோத கும்பல்களை தமிழ்நாடு காவல்துறை என்கவுண்டர் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நேர்மையான அரசுக்கு அதிகாரிகளுக்கு எதிராக அருவா தூக்கும் ரௌடிகள் பயப்படுவார்கள் மக்களும் தமிழக அரசுக்கு இந்த விஷயத்தில் பேராதரவை தருவார்கள் என்பதை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக முத்துரமேசு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மணல் கொள்ளையை தடுத்த விஏஓ கொலை! எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்