மறியல் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் குண்டு கட்டாக கைது; சிறையில் அடைத்து போலீஸ் அதிரடி..

First Published Jul 11, 2018, 2:59 PM IST
Highlights
naam tamizhar party members arrested put in jail for struggling


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை காவலாளர்கள் கைது செது சிறையில் அடைத்தனர். 

புதுக்கோட்டை - தஞ்சாவூர் இடையேயான நெடுஞ்சாலையில் தமிழக அரசு சார்பில் புதிதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. 

புதிய மருத்துவமனை கட்டப்பட்டுவிட்டதால் புதுக்கோட்டை நகரில் செயல்பட்டுவந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

புதிய மருத்துவமனைக்கும், பழைய மருத்துவமனையான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும் 5 கிலோ மீட்டர் தொலைவு. இதனால் நகரில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வர மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர், "பழைய இடத்திலேயே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இராணியார் மருத்துவமனையை இயக்க வேண்டும்" என்று வலியுறுத்தி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று மறுத்தனர். இதனால், நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன்பு இருக்கும் சாலையில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை நகர காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ய முற்பட்டனர். இதனால் காவலாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 

இதனையடுத்து காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுபோய் காவல் வாகனத்தில் ஏற்றினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 

அதன்பின்னர் அனைவரையும் மாலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டால் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அனைவரும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!