
பெரம்பலூர்
எட்டு வழி சாலையை கைவிட வலியுறுத்தி மக்கள்நல போராட்ட குழுவினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் மக்கள்நல போராட்ட குழுவினர் நேற்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் சு.அசன் முகமது தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர்.ராஜாசிதம்பரம், த.மு.மு.க மாவட்டத் தலைவர் எம்.எஸ். சுல்தான் மொய்தீன், பகுஜன் சமாஜ் மாநில நிர்வாகி ப. காமராசு, வழக்குரைஞர் இரா. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவிப்பது,
விவசாயிகளையும், இயற்கைச் சூழலையும் பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்துவது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.கே. ராஜேந்திரன், மின்வாரிய (சிஐடியு) வட்டத் தலைவர் எஸ். அகஸ்டின்,
இந்தியத் தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் பி.ஆர். ஈஸ்வரன், பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன், சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எட்டு வழிச் சாலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இறுதியில் திராவிடர் கழக நிர்வாகி அக்ரி ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.