நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என்று சீமான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வேதாரண்யத்தில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீமான் பேசிய போது, “உலகின் 2-வது பெரிய கடற்கரையில் ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துகிடக்கிறார்களே. அவர்கள் என்ன செய்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் ஆட்சி அமையும். எப்படி கர்நாடகா அரசு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதி காக்கிறதோ அதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை கடப்பாரை கொண்டு இடிப்பார்கள். அங்கே இருக்கும் எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் எங்கேயெனும் வைத்துக் கொள். கர்நாடகாவில் முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்துக்கு காலணி மாலை அணிவிக்கிறார்கள்.
அவர் இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். எனக்கு துடிக்கிறது. வலிக்கிறது. ஏன் எனில் அவர் 'தமிழ்நாட்டு' முதலமைச்சர் என்பதால். ஆனால் திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை என்பதால் வாய் திறக்கவில்லை. அதற்கும் நாம் தமிழர்தான் பேச வேண்டியதிருக்கிறது. கர்நாடகா மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது என்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.
அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை தடுக்க முடியாது என தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கட்டும். நாங்க பார்த்து கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் பட அவமதிப்பு என்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு அவமானம். ஒரு பேரினத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்” என்று சீமான் பேசினார். இது திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D