என்ன காந்தி இறந்து விட்டாரா? கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சீமான்!

By Manikanda PrabuFirst Published Apr 1, 2024, 9:57 AM IST
Highlights

பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்

கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கு இன்னும் 20 நாட்களே உள்ளதற்கு இடையே, கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாமலை பெற்ற தரவுகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி இன்று மீண்டும் சாடியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது என சீமான் விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது. இப்போதுதான் அவர்கள் கனவில் இருந்து விழித்துள்ளார்கள் என்றார். “1974இல் ஒப்பந்தம் போட்டு 1976 இல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு குறித்து, இப்போது ஆர்.டி.ஐ. போட்டு அண்ணாமலை எடுத்துக் கொடுத்தாராம். இவ்வளவு நாள் இவர் எங்கே போய் படுத்தாராம்.” என சீமான் காட்டமாக பேசினார்.

Annamalai : பாஜக என்ற ஒரே வண்டி தான் டெல்லி செல்லும்.! ஒரே டிரைவர் நான் தான் இருக்கிறேன் - அண்ணாமலை அதிரடி

கச்சத்தீவுக்கு ஆர்.டி.ஐ. போட்டது போன்றே, மேகதாது அணை, ஈழப் படுகொலை, குஜராத் கலவரம், மணிப்பூர் கலவரத்துக்கும் ஒரு ஆர்.டி.ஐ. போட்டு எடுத்துத் தர சொல்லுங்கள் என்ற சீமான், “கச்சத்தீவை காங்கிரஸ் ஒப்படைத்ததை கண்டு ஒவ்வொரு இந்தியனும் கொதித்து போயுள்ளதாக சொல்கிறார்கள். குஜராத் கலவரம், மணிப்பூர் கலவரம் கண்டு நாங்களும் தான் கொதித்து போயுள்ளோம். உங்களை இந்த தேர்தலில் இருந்து விரட்டுவோம்.” என பாஜகவுக்கு எதிராக சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், “கச்சத்தீவு குறித்து இத்தனை காலம் கழித்து இப்போது பிரதமர் பேசுகிறார். பத்தாண்டுகாலம் பல முறை வந்தார். 840 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் கச்சத்தீவு பற்றி அவர்களுக்கு வராத பற்று இப்போது வருகிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் வருகிறது. நாங்கள் தான் கச்சத்தீவை பற்றி தொடர்ந்து பேசுகிறோம். அது தேர்தலில் எதிரொலிப்பதால் இப்போது அவர்கள் முன்னதாக பேசத் தொடங்கியுள்ளனர். என்னை பாஜகவின் B டீம் என சொல்லும் பெருமக்களே, பாஜகதான் என்னுடைய B டீம் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.” என்றார்.

click me!