நள்ளிரவில் அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு; தூங்கிக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டர் சுதாரித்ததால் உயிர்தப்பினர்...

 
Published : Jun 13, 2018, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
நள்ளிரவில் அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு; தூங்கிக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டர் சுதாரித்ததால் உயிர்தப்பினர்...

சுருக்கம்

Mystery persons burn government bus midnight

கடலூர் 

கடலூர் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மர்ம நபர்கள் தீ வைத்தனர். பேருந்துக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், நடத்துநர் சுதாரித்ததால் உயிர்தப்பினர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குச் சொந்தமான வழித்தடம் 19-ல் செல்லும் அரசு நகர பேருந்து  ஒன்று பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த பேருந்து இரவு 11 மணிக்கு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பண்ருட்டிக்கு புறப்பட்டு செல்லும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் இருந்து அரசு நகர பேருந்து பயணிகளுடன் குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை திருநாவுக்கரசு ஓட்டினார். நடத்துநராக பரசுராமன் என்பவர் பணியில் இருந்தார். 

அந்த பேருந்து இரவு 11 மணிக்கு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்துக்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் வழக்கம்போல் பேருந்துக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் டயர் எரிந்து புகை நாற்றம் வருவதை உணர்ந்த ஓட்டுநரும், நடத்துநரும் உடனே கீழே இறங்கி வந்து பேருந்தை பார்த்தனர். அப்போது பேருந்தின் வலது புற பின்பக்க டயர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மணலை கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்தனர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாற்று டயர் பொருத்தப்பட்டு அந்த பேருந்து அங்கிருந்து பண்ருட்டி பணிமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் குறிஞ்சிப்பாடி காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேருந்து எரிந்தபோது அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், நள்ளிரவில் அரசு பேருந்துக்கு மர்மநபர்கள் யாரோ? தீ வைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து காவலாளர்கள் பேருந்து நிலைய பகுதி மற்றும் வணிக வளாகங்களில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் அரசு பேருந்துக்கு தீ வைத்து சென்ற மர்மநபர் களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். 

டயர் கருகியதை உணர்ந்த ஓட்டுநரும், நடத்துநரும் சுதாரித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கியதால், பேருந்து முழுவதும் எரிவது தவிர்க்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி காவலாளர்கள் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!