ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்; கோவையில் சிக்கிய மூவர்; 220 கிலோ பறிமுதல்... 

First Published Jun 13, 2018, 9:20 AM IST
Highlights
Cannibal smuggling from Andhra to Kerala Three arrested 220 kg cannabis confiscated ...


கோயம்புத்தூர்

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு 220 கிலோ கஞ்சாவை கடத்திய வடமாநில பெண் உள்பட மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 

கோயம்புத்தூரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுக்க போதைப் பொருள் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் வின்சென்ட், ஆய்வாளர் மணிவர்மன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இந்த தனிப்படையினர் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூர் நீலாம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் மில் அருகே தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். 

அந்தக் காரை சோதனையிட்டு உள்ளே பார்த்தபோது 8 வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த காவலாளர்கள் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

உடனே காரில் ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு இளைஞர்களை காவலாளர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவராஜ்நாயக் (27), சம்பத் பஞ்சாரா (28), மற்றும் லக்மி சர்ஹாரா (27) என்பது தெரியவந்தது. 

அவர்கள், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை, சேலம் வந்து கோவை வழியாக கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கஞ்சா மூட்டைகளை கடத்திக் கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.

மேலும், பெண் காரில் இருந்தால் காவலாளர்கள் சந்தேகப்படாமல் அனுப்பிவிடுவார்கள் என்றும் எளிதில் போதைப் பொருளை கடத்திவிடலாம் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டு வந்ததானராம். 

அவர்கள் வந்த காரின் பதிவு எண் போலி என்றும், அந்த எண் ஆந்திர மாநிலத்தில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண் என்பதும், உண்மையான பதிவு எண் மீது போலி பதிவு எண்னை ஒட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து விலையுயர்ந்த மூன்று செல்போன்கள், ரூ.10 இலட்சம் மதிப்புள்ள சொகுசு கார், 220 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 இலட்சம் இருக்கும்.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின்படி காவலாளர்கள் வழக்குப்பதிந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.
 

click me!