
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் இன்று காலை புறப்பட்டது. சுமார் 7.30 மணியளவில் சானடோரியம் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தில் ஒரு டிராவல் பை கிடந்தது. அதில் இருந்து புகை வந்து கொண்டு இருந்தது. இதை பார்த்த பயணிகள் சிலர், அருகில் சென்று பையை திறந்து பார்த்தனர். அதில், 40க்கு மேற்பட்ட பேட்டரிகள், எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டுகளும், வயர்களும் இருந்தன. அதில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர். அங்கு தீவிர சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள், அந்த பையை கைப்பற்றி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார், தாம்பரம் ரயில் நிலையம் கொண்டு சென்று சோதனை செய்தனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் புராஜக்ட் வேலைக்காக பயன்படுத்தியுள்ளனர். ரயிலில் செல்லும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்து இருக்கலாம். அந்த அதிர்ச்சியில், பையில் இருந்த பேட்டரியில் இருந்து புகை வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். காலை நேரத்தில் தண்டவாளம் பகுதியில் மர்ம பை இருந்ததால், வெடிகுண்டு பீதி ஏற்பட்டு, சானடோரியம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.