
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பள்ளிக்கல்வித் துறையில் தான் எடுத்த முயற்சிகளால் உருவான திட்டங்களைத்தான் தற்போது செங்கோட்டையன் செயல்படுத்தி வருவதாக, ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் அறிவிக்கும் திட்டம் ரத்து, பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு, பாடத்திட்டங்கள் மாற்றம் என பல புதிய திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து வருகிறார்.
இது குறித்து ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது திட்டமிட்டிருந்த பணிகளை நிறைவேற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது என தெரிவித்தார்..
மாணவர்களின் உடையில் மாற்றங்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அறிவிப்பில் மாற்றங்கள் கொண்டு வந்ததைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் பள்ளிக்கல்வித் துறையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள அனைத்துத் திட்டங்களும், தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முயற்சியால் வந்த திட்டங்கள்தான் என்றும் மாபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.