
பால் உற்பத்தி குறைந்த பிறகு மாட்டை இறைச்சிக்காக பயன்படுத்துகிறோம் எனவும் யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு தீர்மானம் செய்ய கூடாது எனவும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் செங்கோட்டுவேல் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
மேலும் கேரளா, கர்நாடக, பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எதிர்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பால் உற்பத்தியாளர் சங்கமும் போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செங்கோட்டுவேல் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயத்தின் உபதொழில் பால் உற்பத்தி. பால் உற்பத்தி குறைந்த பிறகு மாட்டை இறைச்சிக்காக பயன்படுத்துகிறோம். யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு தீர்மானம் செய்ய கூடாது.
மாடுகளை விற்க முடியாது என்றால் மாடுகளை வளர்க்க வேண்டிய தேவை இல்லாமல் போய் விடும். மாடு வளர்க்க வில்லை என்றால் பால் உற்பத்தி குறைந்துவிடும்.
பால் வரத்து குறித்த பிறகு இறைச்சி முதல் தோல் வரை மாடுகளை பயன்படுத்த முடியும். கிராமத்தில் உள்ள மக்களுக்கு மாட்டிறைச்சியை போன்ற சிறந்த உணவு இல்லை.
அரசின் மாட்டிறைச்சியின் தடையை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெறும். ஜல்லிக்கட்டை போல மாட்டிறைச்சிக்கும் பெரிய போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.