
தமிழக அரசியல் அரங்கில், திமுகவுக்கு அடுத்தபடியாக சுளீர் பளீர் அறிக்கைகளை வெளியிடும் கட்சி பா.ம.க... அரசுத் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்டுவதாகட்டும், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதாகட்டும் அதிரி புதிரி அறிக்கைகளை வெளியிட்டு சுள்ளென சுடுவதே ராமதாஸின் பாணி.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை என்றால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள். அந்த அளவுக்கு காரம் குறையாமல் இருக்கும். புலிக்குப் பிறந்தது பூனையாகி விடுமா, தந்தையைப் போலவே தமையனும். பொதுச்சேவை மையங்கள் மூடல் விவகாரத்தில் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மின்னணு பொதுச் சேவை மையங்களில் கணிசமானவை மூடப்பட்டு விட்டன. மீதமுள்ளவையும் அடுத்த சில மாதங்களில் மூடப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வந்த பொதுச்சேவை மையங்களை மூடும் பினாமி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியதாகும்."
மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றும் அரசுத் துறைகளில் ஊழலை ஒழிப்பதற்கான முக்கியமான திட்டங்களில் முதன்மையானவை பொதுச்சேவை பெறும் உரிமை சட்டமும், பொதுச்சேவை மையங்களும் ஆகும்."
"பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு அலுவலகங்களில் தான் சிறிய அளவிலான கையூட்டு தொடங்குகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் இருக்கும் வசதிகளையும் பறிப்பது எந்த வகையில் நியாயம்?"
"மக்களுக்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவது மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை ஆகும். மக்களுக்கு வீடு தேடி சென்று சேவை வழங்காவிட்டாலும், குறைந்தபட்சம் வசதிகளையாவது பறிக்காமல் இருந்தால் நலம்."இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தந்தையைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்று சும்மாவா சொன்னார்கள்....!