
சாதிமறுப்புத் திருமணம் செய்த சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கௌசல்யா, தனது தந்தை குற்றவாளி; எனவே அவரை குற்றவாளி என்றுதானே சொல்வார்கள் என நெற்றியில் அடித்தாற்போல பதிலளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் கொலை செய்த மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கௌசல்யாவின் தாய், தாய்மாமா மற்றும் பிரசன்னகுமார் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனது கணவரான சங்கர் கொலை செய்யப்பட்டதிலிருந்து கணவரின் கொலைக்கு நீதி கிடைக்க, அவரது குடும்பத்துடன் இணைந்து தன் குடும்பத்திற்கு எதிராக போராடிவந்தார் கௌசல்யா.
இந்நிலையில், சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, குற்றவாளியை குற்றவாளி என்றுதானே சொல்வார்கள் என நெற்றியடி பதிலை அளித்தார் கௌசல்யா.