என்னுடைய கனவெல்லாம் இதுதான்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!

By Manikanda Prabu  |  First Published Nov 29, 2023, 5:27 PM IST

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும், மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும் என்பதுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வஞ்சிப்பாளையத்தில் இன்று தொடங்கப்பட்டது. புதிதாக தொடங்கப்பட்ட அந்த கல்லூரியின் கட்டடங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்து காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையில், 1991-ஆம் ஆண்டு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டு, இன்றைக்கு 3,135 மாணவ மாணவியர் பயின்று வரும் மிகப்பெரிய பள்ளியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் இங்கே அதிகம் படிக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

இதன் அடுத்தகட்டமாக, மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது.  கல்லூரி கட்டியது போக மீதமிருக்கின்ற இடத்திலேயும் பள்ளி தொடங்க முடிவு செய்திருக்கிறீர்கள். கல்லூரியை தொடங்கி வைப்பது - பள்ளிக்கு அடிக்கல் நாட்டுவது என்று, இரண்டு பணியையும் எனக்கு கொடுத்ததுதற்கு முதலில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கின்ற பெண்களுக்கான கல்லூரியாக இது மாறியிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதிக்கு இரண்டு பெண்கள் கல்லூரிகள் வந்திருக்கிறது என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞரும் கொங்குப் பகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டார்.

கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்ததும் முத்தமிழறிஞர் கலைஞர்தான். இப்படி இந்தப் பகுதி வளரவும், இந்தப் பகுதி மக்கள் முன்னேறவும் - பெண்களுடைய கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருவதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாக கிடைத்துவிடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால்தான், இன்றைக்கு வீடுகள்தோறும் பட்டதாரிகள் வலம் வருகிறார்கள்.

இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி – உயர்கல்விகள் என்று நிறைய படிக்கவேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குதான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வர மாணவிகளுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம். பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் – மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும். பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது! பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது. படித்து முன்னேறி வாங்க… வரலாற்றில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

click me!