
தலைவாசல் அருகே அதிமுக கிளை செயலாளரான என் சகோதரனை, முன்னாள் ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோரே திட்டமிட்டு கொன்றனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலைச் செய்யப்பட்டவர் கெங்கவல்லி, எம்.எல்.ஏவின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம், தலைவாசல், புளியங்குறிச்சியைச் சேர்ந்த ராசு மகன் வீரத்தமிழன் (29). கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவின் தங்கை மகனான இவர், புளியங்குறிச்சி அதிமுக கிளை செயலராக இருந்தார்.
ஞாயிற்றுகிழமை இரவு சித்தேரி - புளியங்குறிச்சி சாலையில் இரத்தக் காயங்களுடன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தார். அவரது சகோதரர் மணிகண்டன் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பின்னர், நேற்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “புளியங்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் சுதா, துணைத்தலைவர் கந்தசாமி, ஊராட்சி செயலர் மாயக்கண்ணன் ஆகியோர், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுப்பு வீடுகளை, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கி பணம் பார்த்துள்ளனர்.
மேலும், வீடுகள் கட்டாமல், கட்டியதாக ஆவணம் தயாரித்து, காசோலை மூலம் பணம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, சேலம் ஊழல் தடுப்பு பிரிவு காவலாளர்களிடம், வீரத்தமிழன் கொடுத்த புகார், விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், சகோதரர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதனால், சுதா, கந்தசாமி, மாயக்கண்ணன் மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் வீரத்தமிழன் இறந்தது விபத்தா? திட்டமிட்ட கொலையா? என காவலாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.