
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிரிழந்த நந்தினியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 25 இலட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பெரம்பலூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பி. காமராஜ் சிறப்புரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எழுத்தாளர் மணவை முஸ்தபா, சிறுகடம்பூர் நந்தினி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது,
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிரிழந்த நந்தினியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 25 இலட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.
பெரம்பலூரில் பொதுமக்களை ஏமாற்றி, பல ஆண்டுகளாக மாந்த்ரீக செயல்களில் ஈடுபட்டிருந்த கார்த்திக்கின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தாத காவல் துறையினரை கண்டிப்பது,
2017-க்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல்,
பெரம்பலூரில், இயக்கத்தின் மத்திய மண்டல குழு கூட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிர்வாகிகள் தமிழோவியன், தங்கவேல், சதீஷ், பிச்சைபிள்ளை, ரகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் காப்பியன் வரவேற்றார். துணைத்தலைவர் மொகைதீன் நன்றி தெரிவித்தார்.