
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பொதுக்கிணறை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் க.நந்தகுமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் ஆட்சியர் க.நந்தகுமாரிடம், கிராம மக்கள் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பொதுக்கிணறு இருந்தது.
இந்த நிலையில், இந்த கிணறை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, இந்த இடத்திற்கு அவர்களது பெயரில் பட்டா வாங்கியுள்ளனர். அந்த இடத்தில் நியாயவிலைக் கடை கட்டப்பட உள்ளதால், பட்டாவை ரத்து செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் கடந்த 20 மாதங்களுக்கு முன், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பள்ளத்தை மூடாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இந்த பள்ளத்தை தோண்டிய முன்னாள் ஊராட்சித் தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.