
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) எம்.பில் படித்து வந்த தமிழக மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறப்படும் நிலையில் அது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலித் மாணவர்
சேலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணன். இவரின் தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். தாய் தினக்கூலியாக வேலைக்கு சென்று வருகிறார். முத்துக்கிருஷ்ணனுக்கு உடன் பிறந்த 3 சகோதரிகள் உள்ளனர்.
ஐதராபாத் பல்கலை
கடந்த 2012ம் ஆண்டு ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நவீன வரலாறு முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில். ஆய்வுப்படிப்புக்கு மூன்று முறை முயற்சித்தும் கிடைக்காததை அடுத்து, ஐதராபாத் பல்கலையில் எம்.பில். படிக்கத் தொடங்கினார்.
வெமுலாவுக்கு நண்பர்
ஐதராபாத் பல்கலையில், கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து போன ரோஹித் வெமுலாவுக்கு நெருங்கிய நண்பராகவும் முத்து கிருஷ்ணன் இருந்து வந்தார். ரோகித் வெமுலா கடந்த ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மர்மமாக இறந்தார்.
அதன்பின் 6 மாதங்கள் மட்டும் அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணனுக்கு டெல்லி ஜே.என்.யு.வில் எம்.பில். படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து ஜூலை மாதம் டெல்லி சென்றார்.
முதலாம் அஞ்சலி
ஐதராபாத் பல்கலையில் மர்மமாக இறந்த ரோஹித் வெமுலாவுக்கு நீதி கேட்கும் இயக்கத்திலும் தீவிரமாக முத்துக் கிருஷ்ணன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால், ரோகித் வெமுலாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்தபோது டெல்லியில் இருந்து வந்து முத்துக் கிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
சிறந்த மாணவராம்..
ரோகித் வெமுலா சாவு குறித்தும், நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சாதி வேற்றுமையுடன் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் வேதனையுடன் கட்டுரைகளை எழுதியுள்ளார். மிகவும் அறிவார்ந்த மாணவராகவும், எழுச்சியுடன் பேசக்கூடியவராகவும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் முத்து கிருஷ்ணன் வலம் வந்தார் என அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை அன்று டெல்லி முனிர்காவில் உள்ள தனது தென் கொரிய நண்பர் கோமன்கிம் வீட்டுக்கு முத்துக்கிருஷ்ணன் சென்றுள்ளார். அவருடன் பேசிவிட்டு, தனது அறையில் தூங்கச் செல்வதாக் கூறிவிட்டு கிருஷ்ணன் சென்றார்.
தூங்கச் சென்றார்
அதன்பின், மாலை 4.30 அளவில் நண்பர்கள் முத்துகிருஷ்ணன் செல்போனுக்கு அழைத்தும் அவர்பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால், நீண்டநேரம் ஆகியும், முத்து கதவை திறக்கவில்லை.
தூக்கு
அதன்பின், அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்துப்பார்த்த போது, அங்குள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு பிணமாகக் தொங்கினார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, முத்துகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வர்சிங் கூறுகையில், “ ரோகித் வெமுலா மர்மச் சாவுடன், முத்து கிருஷ்ணனின் சாவை ஒப்பிட்டு இப்போது பார்க்க இயலாது. எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட தகவலில், எந்த அரசியல் அமைப்பிலும், முத்துகிருஷ்ணனுக்கு தொடர்பு இல்லை. இவருக்கு எதிராக பல்கலைக்கழகம் சார்பில் எந்த புகாரும் இல்லை, இவரும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு எதிராக எந்த புகாரும் யாரிடமும் கொடுக்கவில்லை.
முத்துகிருஷ்ணன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இப்போது வரை தெரியவில்லை. எந்த விதமான கடிதத்ைதயும் அவரின் அறையில் இருந்து எடுக்கவில்லை. அவரின் அறை முழுவதையும் தீவிரமாகத் தேடினோம். ஆனால், எந்தவிதமான கடிதமும் கிடைக்கவில்லை. அவரின் அறையை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. தடியவியல் நிபுனர்கள் வந்தபின், அறை மீண்டும் ஆய்வு செய்யப்படும். அவரின் பேஸ்புக் பக்கங்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.
‘தேசத்தின் தலைவர் எல்லோரையும் விற்றுவிடுவார்’
ஐதராபாத் பல்கலையில் ரோகித் வெமுலா மர்மமாக இறந்தபின், தனது பேஸ்புக் பக்கத்தில் முத்துக்கிருஷ்ணன் எழுதிய பதிவு.
“ அன்புக்குரிய தேசத்துக்கு விரோதமானவர்களே. நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த நாட்டின் தலைவர் (பிரதமர் மோடி) ஒருநாள் அனைவரையும் விற்றுவிடுவார். ஒரு செல்பிக்காகவும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுடன் கைகுலுக்கவும் மட்டுமே அவர் இருக்கிறார். நூற்றுக்கணக்கான டப்பா ராவ்கள், ஆயிரக்கணக்காண ரோகித் வெமுலாவை கொல்லப்போகிறார்கள். ரோகித் மாணவர்களுக்கு கிடைத்த பரிசு.