நாட்டில் எந்த ஒரு பிரதமரும் இப்படிபட்ட கீழ்த்தரமான பேச்சுகளை பேசவில்லை என தெரிவித்த முத்தரசன், தோல்வி உறுதியான நிலையில் இப்படிபட்ட கீழ்தரமான, அருவருக்க தக்க பேச்சுகளை மோடி பேசியுள்ளார் என தெரிவித்தார்.
மோடியின் வெறுப்பு பிரச்சாரம்
தஞ்சாவூரில் நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நூல்களை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தல் 7- வது கட்டத்தோடு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் மோடி மேற்கொண்ட பிரச்சாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது. தமிழ்நாட்டில் வந்த போது ஒரு வித பிரச்சாரத்தையும், வடமாநிலங்களுக்கு சென்ற போது இந்து - முஸ்லீம் என வேறுபடுத்தியும், பின்னர் வடக்கு, தெற்கு என்று கூறினார். தொடர்ந்து குழந்தை ராமர் குடிசையில் இருந்தார் அவரை நாங்கள் கொண்டு வந்து கோபுரத்தில் வைத்துள்ளோம் என கூறினார். இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என கூறினார்.
3வது முறை மீண்டும் மோடி.. அடித்து கூறும் கருத்துக்கணிப்பு முடிவுகள்.. காங்கிரஸ் சொதப்பியது எங்கே?
போலித்தனமான தியானம்
பின்னர் அந்த பிரச்சாரமும் போதவில்லை என்பதால் நான் தியானம் மேற்கொள்கிறேன் எனக் கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார், தியானம் என்பது அமைதியாக நடைபெறவேண்டிய ஒன்று. ஆனால், டெல்லிலிருந்து வந்ததிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் கோயிலில் வழிபடுவது, காவி உடை தரிச்சித்திருப்பது, உத்திராட்சம் உருட்டுவது என்று ஒவ்வொன்றையும் பத்திரிகையாளர் மூலம் படம் பிடித்து அனைத்தும் வெளியானது. இதிலிருந்து தெரிகிறது இந்த தியானம் என்பது எவ்வளவு போலித்தனமானது, அவர் மக்களை ஏமாற்றுகிறார். வாரணாசி தேர்தலில் இது பயன்படும் என்ற நப்பாசையில் செயல்பட்டுள்ளார். 2014, 2019 ம் ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எங்கும் பேசவில்லை. மாறாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மத, சாதி ரீதியான பிரச்சினைகளை பேசியுள்ளார்.
மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறைவேற்றியுள்ளது
இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் இப்படிபட்ட கீழ்த்தரமான பேச்சுகளை பேசவில்லை. இவ்வளவு வெறித்தனத்துக்கு காரணம் என்னவென்றால் தோற்று போகிறோம் என்பதால்தான். தோல்வி உறுதியான நிலையில் இப்படிபட்ட கீழ்தரமான, அருவருக்க தக்க பேச்சுகளை மோடி பேசியுள்ளார்.நிச்சயம் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பு என்பது, மோடி கூறியதை ஊடகங்கள் கூறியுள்ளது. மோடி 400 இடங்கள் என கூறினார் அதில் சில குறைந்துள்ளது, மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறைவேற்றியுள்ளது. 4-ம் தேதிக்கு பிறது உண்மை என்னெவென்று தெரியும் அதுவரை பொறுத்திருப்போம் என தெரிவித்தார்.