
ஈட்டிமுனையில் நிறுத்தினாலும் மாறாதவர்கள் முஸ்லிம்கள். அந்த வகையில் திமுகவிற்கு பெருத்த ஆதரவு அளிப்பார்கள் என்று சட்டசபை எதிர் கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறினார்.
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர்அகமது வரவேற்றார். அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் கே.சி.பழனிசாமி பேசினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தி.மு.க. தலைவர் கருணாநிதி மக்களுக்காகவே தன்னை அற்பணித்துக் கொண்டவர். தேர்தல் ஆணையமும், ஆளுங்கட்சியும் சேர்ந்து அனைத்து தொகுதிகளுடனும் சேர்ந்து நடக்க வேண்டிய அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலை தடுத்து நிறுத்தியது.
ஈட்டிமுனையில் நிறுத்தினாலும் மாறாதவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் கொள்கையோடு இருப்பவர்கள். அந்த வகையில் தி.மு.க.விற்கு பெருத்த ஆதரவு அளிப்பார்கள். தமிழக அரசு புது வடிவம் பெரும் காலம் விரைவில் வரும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று முதலில் கூறியவர் கருணாநிதி.
கடந்த முறை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.சி.பழனிசாமி சட்டமன்ற தொகுதி நிதி மட்டும் இன்றி, தனது சொந்த நிதியையும் போட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இதனை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்“ என்று அவர் கூறினார்.
இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை செயலாளர் சக்திகோச் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கலிலுர்ரஹ்மான், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.மணியன், கே.கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரவக்குறிச்சி நகர செயலாளர் ம.அண்ணாதுரை நன்றி கூறினார். முன்னதாக அரவக்குறிச்சியில் தி.மு.க. தேர்தல் பணிமனையை சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.