
கேரளாவில் இருந்து 24 லாரிகளில் வந்த மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டதற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியத்தின் மனைவி சகுந்தலா கடந்த 28–ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டிற்கு வந்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், “கேரளா மாநிலத்தில் இருந்து 24 லாரிகளில் மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கோவை மாவட்டம் மதுக்கரை, கே.கே.சாவடி ஆகிய இடங்களில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
மருத்துக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கேரளா மாநிலத்தில் கோழிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக செய்திகள் பரவுகிறது. தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கோழி முட்டை, கறிக்கோழிகள் வியாபாரம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்க பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. தமிழக அரசு இடத்தை உறுதி செய்தால் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, உடனடியாக இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.
சட்டமன்ற இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்கிற நிலை மாறிவிட்டது. எனவே தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. மனசாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
விவசாயிகள் பிரச்சனை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தண்ணீர் பிரச்சினை விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கான குடிநீர் பிரச்சினையுமாகவும் உள்ளது. எனவே விவசாயிகளுக்காக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டியது அவசியம். ஆதரவு தெரிவிக்காதவர்களை சரியான தருணத்தில் பொதுமக்கள் விடை கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டில் புதிய கவர்னர் அறிவிக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் முழுநேர கவர்னரை மத்திய அரசு விரைவில் நியமனம் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. தமிழக விவசாயிகளை குஜராத் மாநில விவசாயிகளைபோல் நினைத்து மத்திய அரசு செயல்பட வேண்டும். இதேபோல் கர்நாடகா அரசும் விவசாயிகளை ஒன்றாக நினைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இதேதான் அரசியல் தலைவர்களும் பார்க்க வேண்டும். எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் நியாயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அதேபோல்தான் அரசும் செயல்பட வேண்டும். எனவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மையினரை அச்சப்படுத்த தேவையில்லை” என்று ஜி.கே.வாசன் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், துணைத்தலைவர்கள் திருவேங்கடம், ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திசேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா உள்பட பலர் உடன்இருந்தனர்.