
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்றும் கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் தொடர்கதையாக மாறிவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் முன்னாள் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிறு மாலை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திமுக அரசு தேனி மாவட்டத்துக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நான்கு ஆண்டு ஆட்சியில் திமுக அரசு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. 5 மாவட்ட மக்கள் முல்லை பெரியாறு அணையை நம்பியே உள்ளனர். அதிமுக ஆட்சியில்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டுவந்தோம். அதனால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கிறோம். அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது என மக்கள் பாராட்டுகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலமாகத்தான் மக்களுக்கு நன்மை கிடைத்தது. ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.
திமுக அரசு போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிவிட்டது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என எச்சரித்தும் திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டன.
தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. பெண்களுக்கும் பெண் குழந்தைகளும் எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அப்பா... அப்பா... எனக் கதறும்போது தன்னை அப்பா என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் எங்கே போனார்?
உயர் பதவிகளில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் 'யார் அந்த சார்' என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது, முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் நடத்துவதில்தான் கவனமாக இருக்கிறார். இது திராவிட மாடல் அரசு அல்ல, ஸ்டாலின் மாடல் அரசு."
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.