
முன் விரோத தகராறில், வாலிபர், இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், அண்ணன், தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு நேரு, சீனிவாசன் (27) ஆகிய மகன்கள் உள்ளனர். இருவரும் கூலி தொழிலாளிகள். நேருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி இருக்கிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன்கள் சாம்சன் (35), மார்ட்டின். வியாசர்பாடி பகுதியில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார்கள். அண்ணன், தம்பி இருவரும், கடைக்கு வரும் பெண்கள், சாலையில் நடந்து செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வது வழக்கம். இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தள்ளது.
இதையொட்டி கடந்த வாரம் சந்தியா, ஸ்வீட் ஸ்டால் வழியாக நடந்து சென்றார். அப்போது அவரை, இருவரும் கிண்டல் செய்து பாட்டு பாடியுள்ளனர். இதனை தட்டி கேட்டதற்கு, சந்தியாவை ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதுபற்றி கணவர் நேரு, மைத்துனர் சீனிவாசன் ஆகியோரிடம் சந்தியா கூறினார். இதையடுத்து இருவரும் ஸ்வீட் ஸ்டால் சென்று, அங்கிருந்த சாம்சன், மார்ட்டின் ஆகியோரை தட்டிக்கேட்டனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசில், இது தரப்பிலும் புகார் செய்யப்பட்டது. ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாம்சன், மார்ட்டின் ஆகியோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சீனிவாசன், வேலைக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து அவர் வெளியே வந்து வந்து சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த சாம்சன், மார்ட்டின் ஆகியோர் இரும்பு ராடால், அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில், அலறி துடித்த சீனிவாசன், ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினரும், பொதுமக்களும் ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும், 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அதற்குள் சீனிவாசன், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சாம்சன், மார்ட்டின் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.