
ஆவடி அடுத்த கோயில் பதாகை வன்னியர் தெருவை சேர்ந்தவர் பதாகை வீரராகவன் (65). முன்னாள் திமுக நகர துணை செயலாளர். இவரது மகன் சிங்காரம், திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சுந்தரி. ஆவடி நகராட்சி 3வது வார்டு காவுன்சிலர்.
நேற்று மாலை வீரராகவன், இயற்கை உபாதை கழிக்க, எச்விஎப் சாலையில் உள்ள காலி மைதானத்துக்கு தனது மொபட்டில் சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், அவரை சுற்றி வளைத்தது.
பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வீரராகவனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த மர்மகும்பல், அங்கிருந்து தப்பியது. அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வீரராகவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரராகவன் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொலை செய்யப்பட்டரா, தொழில் போட்டியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிரமாக விசரித்து வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.