
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “2016-2017 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21, 22 ஆம் தேதிகளில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
21-ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல், பென்சிங், கடற்கரை வாலிபால், குத்துச்சண்டை போட்டிகளும், ஆண்களுக்கான வாலிபால் போட்டியும் நடைபெறுகிறது.
அன்றைய தினம் தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள வாஞ்சிநாதன் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டி நடைபெறுகிறது.
22-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் தடகளம், ஜிம்னாஸ்டிக், ஜுடோ, டேக்வாண்டா மற்றும் பெண்களுக்கான வாலிபால் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
குத்துச்சண்டை, ஜுடோ, டேக்வாண்டா, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு போட்டிகள் எடைப் பிவுகளின்படி நடைபெறும்.
இதில் கலந்து கொள்பவர்கள் 31.12.2016 அன்று 21 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். (01.01.1996 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்).
தனிநபர் மற்றும் குழுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000-ம், ரூ.750-ம் மற்றும் ரூ.500- ரொக்கப்பரிசாக வழங்கப்படும்” என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.