Mullai Periyar Dam: மறுஆய்வு குறித்த சர்ச்சை.. மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்..

Published : Feb 03, 2022, 06:23 AM IST
Mullai Periyar Dam: மறுஆய்வு குறித்த சர்ச்சை.. மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்..

சுருக்கம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை துரைமுருகன் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முல்லைப்பெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தேசிய நதிநீர் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழவிருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.  

இதுக்குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணையில் காலவாரியான நீர்மட்டம் (Rule Curve), அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல் (Gate Operation Schedule), அளவு மானிகள் பொருத்துதல் (Instrumentation), அணை பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரள மாநில நான்கு தனிநபர்கள் 2020 மற்றும் 2021-ல் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த வழக்குகளுக்கு தேவையான மறுப்பு மனுக்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 15.12.2021 அன்று விவாதத்திற்காக வந்தபொழுது, வாதி பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் 04.02.2022-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு வழக்கை வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது. இவ்வழக்குகளில் தமிழ்நாடு, கேரள அரசுகள் முல்லை பெரியாறு மேற்பார்வை குழு, மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் (Respondents) சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு அதன் பதில் மனுக்களை உச்சநீதி மன்றத்தில் 06.02.2021,  20.04.2021, 16.11.2021 மற்றும் 14.12.2021 தேதிகளில் தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவும், மத்திய நீர்வள குழுமமும் இணைந்து பதில் மனுக்களை 19.04.2021 மற்றும் 14.10.2021 தேதிகளில் தாக்கல் செய்ததுடன், 27.01.2022 ம் தேதியில் மேலும் ஒரு நிலை அறிக்கை (Status Report) உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், 27.01.2006 மற்றும் 07.05.2014 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அணை எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கிறதென்றும்,

எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், இப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணையில் மேற்பார்வைக் குழு 14 முறை பார்வையிட்டதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அதன் பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பதில் மனுவின் ஒரு பகுதியில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறுஆய்வு தேவை என குறிப்பிட்டுள்ளது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. உச்சநீதி மன்றமே அதன் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதிகளில் வழங்கிய ஆணைகளில் எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டபின்தான் பிரத்யேகமான நிபுனர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும் அதன்பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பணிகளை முடித்தபின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு (Review) செய்ய எந்த அவசியமும் இல்லை. அணையின் நீர்கசிவு(Seepage), சுண்ணாம்பு வெளியேற்றம் (Lime Leaching)இவைகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகமிக குறைவாகவே உள்ளது. ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும் அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும்.

மத்திய நீர்வள குழுமத்தின் (CWC) நிலை அறிக்கைக்கான (Status Report) பதில்மனுவை (Response) மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 04.02.2022 - க்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும். நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!