
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ஈரோடு, வேலூர் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி, கும்பகோணம், கடலூர், தாம்பரம் என 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் மூன்றாம் பாலினத்தவரான கங்கா என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆளும் கட்சியான திமுக.
தமிழகத்தில் பிப் 19 ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரிய கட்சிகளாக விளங்கும் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் திருநங்கை ஒருவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு 37-வது வார்டுக்கு உட்பட்ட ஓல்டு டவுன் உத்திர மாதா கோயில் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை கங்கா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போதிலிருந்து கட்சிப் பணி, சமூக நலப்பணி, நல திட்ட பணி என அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். கொரோனா காலத்தில் இவர் ஆற்றிய பணி இந்த வார்டில் உள்ள பொது மக்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 37-வது வார்டில் தனக்கு சீட் ஒதுக்கும் படி தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் மனு அளிக்கச் சென்றுள்ளார். இதனை அடுத்து வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளரிடம் இது குறித்து தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இறுதியில் முதல்வர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் திருநங்கை கங்கா பெயர் இருந்ததுள்ளது. இதை பார்த்து திருநங்கை கங்கா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதனிடையே தங்கள் தொகுதி வேட்பாளர் திமுக சார்பில் திருநங்கை நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் களம் காணும் முதல் திருநங்கை இவர் என குறிப்பிடத்தக்கது.வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் பாலினத்தவரை திருநம்பி, திருநங்கை என அழைக்க அரசாணை வெளியிட்டு அவர்களுக்கு ஓட்டுரிமை, குடும்ப அட்டை போன்றவை கிடைக்க செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 2009ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல அரசு சலுகைகளை வழங்கினார். இது அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்தற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றன்ர்.