பெண்கள் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன்: மகள் சௌம்யா சுவாமிநாதன் பெருமிதம்

By SG Balan  |  First Published Sep 28, 2023, 2:27 PM IST

எம். எஸ். சுவாமிநாதன் கடைசிவரை விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக அவரது மகள் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என பாராட்டப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் சுவாமிநாதனின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் மூன்று மகள்களில் ஒருவரான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தனது தந்தை மறைவை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், துணை இயக்குநர் ஜெனரலாகவும் இருந்தவர்.

Tap to resize

Latest Videos

எம். எஸ். சுவாமிநாதன் யார்? அவரை இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்பது ஏன்?

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சௌமியா சுவாமிநாதன், “...கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை... இன்று காலை அவரது மறைவு மிகவும் அமைதியாக முடிந்தது... அவர் கடைசிவரை விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... மகள்கள் மூவரும் என் அப்பாவும் அம்மாவும் (மீனா சுவாமிநாதன்) எங்களுக்குக் காட்டிய பாரம்பரியத்தை தொடர்வோம்..." என்று குறிப்பிட்டார்.

தந்தை சுவாமிநாதன் பெண்கள் நலனில் ஈடுபாட்டு கொண்டிருந்தது பற்றி நினைவுகூர்த்த அவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், "விவசாயத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் உணர்ந்த ஒருசிலரில் என் அப்பாவும் ஒருவர்... அவரது கருத்துகள் பெண் விவசாயிகளை ஆதரிக்கும் மகிளா சசக்திகரன் யோஜனா போன்ற திட்டங்களுக்கு வழிவகுத்தன. அவர் ஆறாவது திட்டக்க்குழுவில் உறுப்பினராக இருந்தார். அப்போதுதான் முதல் முறையாக, திட்டக்குழு அறிக்கையில் பாலினம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டது... இவை இரண்டும் அவரை மிகவும் பெருமைகொள்ள வைத்த பங்களிப்புகள்..." என்று தெரிவித்தார்.

சுவாமிநாதன் மற்றும் நார்மன் போர்லாக் ஆகியோரின் கூட்டு அறிவியல் முயற்சிகள், பொதுவாக ஏற்கப்பட்டன. இதன் மூலம் 1960களில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிலவிய உணவுப் பஞ்சத்தைப் போக்கத் தேவையான விவசாய உற்பத்தியை பெருக்க வழிவகுக்கப்பட்டது.

இதனால், எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுவது மட்டுமின்றி, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தில் "பொருளாதார சூழலியலின் தந்தை" என்றும் போற்றப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப், மெசெஞ்சரில் ChatGPT போன்ற வசதி! மெட்டா கனெக்ட் மாநாட்டில் ஜூக்கர்பெர்க் சொன்ன குட் நியூஸ்!

click me!