மோட்டர் வாகனச் சட்டத் திருத்தம் - மத்திய அரசுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் அதிரடி கைது...

First Published Aug 8, 2018, 9:34 AM IST
Highlights

மோட்டர் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதன்படி, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி,  கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மோட்டார் தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 75 சதவிகிதம் வேன், ஆட்டோ, வாடகை கார் போன்றவை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், "மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்  பெற வேண்டும்" என்று நேற்று நாகர்கோயிலில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகன் தலைமை வகித்தார். தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் இளங்கோ தொடக்க உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் நூர்முகமது சிறப்புரை ஆற்றினார். ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் அனந்த கிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார்.

இதில், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் சோபன்ராஜ், இலட்சுமணன், அந்தோணி, தொ.மு.ச. நிர்வாகிகள் பெருமாள், ஜலீல், சிவன் பிள்ளை,  ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி முருகேசன், எச்.எம்.எஸ். நிர்வாகிகள் இலட்சுமணன், பால்ராஜ், அனைத்து மோட்டார் சங்க நிர்வாகிகள் காரவிளை செல்வின், ஜோஸ்லின் ஜீவா மற்றும் மாஹீன் ஆகியோற் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "திரும்பப் பெறு! திரும்பப் பெறு! மோட்டர் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறு! என்று முழக்கமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். 

click me!