மீன்வளத் துறையைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தினர்.
மீன்வளத் துறையைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தினர். தடைச் செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இப்படி தடைச் செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மீன்வளத் துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.
இதனைக் கண்டித்து சித்திரைப்பேட்டை, அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு, தைக்கால் தோணித்துறை, சலங்குகாரத் தெரு, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பட்டறையடி, சின்னவாய்க்கால், முடசலோடை, அன்னப்பன்பேட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி, மீன்வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து கடலூரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று கருப்புக் கொடியை ஏந்திக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சோனங்குப்பம் மீனவ கிராமத் தலைவர் ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.