கோவையில் கொட்டித் தீர்க்கும் மழை - சூறாவளிக் காற்றுக்கு சாய்ந்த இராட்சத மரம்; 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 17, 2018, 7:00 AM IST
Highlights

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. 

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும், அடித்த சூறாவளிக் காற்றுக்கு இராட்சத மரம் ஒன்று விழுந்து மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

கேரளத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டம் என்பதாலேயே கோயம்புத்தூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு கூட ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஆனைமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து வருகின்றன. அதன்படி, நேற்று அதிகாலை பொங்காளிவூரில் பெய்த பலத்த மழையால் வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கியது. 

இதில், கந்தன், வீரன், பாண்டியன் ஆகிய மூவரின் வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன. நல்லவேளையாக சுவர்கள் வெளிப்புறமாக விழுந்ததால் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. இதேபோன்று அங்கலக்குறிச்சி பகுதியிலும் மூன்று வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. 

நேற்று காலை ஆனைமலை அடுத்துள்ள குப்புச்சிபுதூரிலுல் உள்ள குளத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கியதால் அப்பகுதியிலிருந்து ஏழு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. 

கோவையில் பெய்து வரும் பலத்த மழைக்கும், அடித்த சூறாவளிக் காற்றுக்கும் பொள்ளாச்சி - டாப்சிலிப் செல்லும் சாலையில் இராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொட்டும் மழையிலும் இந்த இராட்சத மரத்தை அகற்றும் பணி நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வனத்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதால் டாப்சிலிப், பரம்பிக்குளம், சர்க்கார்பதி போன்ற சாலைகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

click me!