
இராமநாதபுரம்
இராமேசுவரத்தில் அம்மா உணவகத்தில் தயிர் சாதத்தை சாப்பிட்டு 5-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திற்கு நாள்தோறும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் அடியார்கள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் அடியார்கள் இராமேசுவரம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான அம்மா உணவகத்தில் விலை குறைவாக இருக்கும் என்பதால் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த அடியார்கள் ஞாயிற்றுக்கிழமை இராமேசுவரம் வந்துள்ளனர். அவர்கள் சுவாமி தரினம் செய்துவிட்டு அம்மா உணவகத்தில் மதியம் தயிர் சோறு சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, அதில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தயிர் சாதம் சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.
அதன்பின்னர், தயிர் சாதத்தை சாப்பிட்ட உணவில் பல்லி இறந்த நிலையில் இருப்பதை கண்ட அவர்களின் உறவினர்கள் அலறினர். பின்னர், பல்லி விழுந்த தயிர் சாத்தை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இயல்பு நிலைக்கு வந்ததையடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.