
வேலூர்
வேலூரில் பலமுறை புகாரளித்தும் குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காததால் வெற்றுக் குடங்களுடன் 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பன்னியூர் ஊராட்சியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சினம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சுமார் 11 மணியளவில் காவேரிப்பாக்கத்தில் இருந்து பாணாவரம் செல்லும் சாலையில் வெற்றுக் குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு மற்றும் அதிகாரிகள், பாணாவரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மக்கள், “குடிநீருக்காக நாங்கள் தினமும் பல கிலோ மீட்டர் சென்று வயல் வெளிகளில் தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே, பன்னியூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு, “உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனையை போக்க ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.