
திருப்பூர்
திருப்பூரில் காமராஜர் சாலையில் அரசு திட்டமிட்டபடி மேம்பாலத்தை கட்டாமல் வேறு திட்டத்தில் மேம்பாலம் கட்டப்படுகிறது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிராபிக் ராமசாமி புகார் மனு கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் எதிரில் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பாலம் கட்டுவதற்காக அறிவிக்கப்பட்டபோது திட்டமிடப்பட்ட நீளத்தைக் காட்டிலும், குறைவான நீளத்தில் கட்டப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திருப்பூரில் காமராஜர் சாலையில் மேம்பாலம், யாருக்கும் பயனற்ற வகையில் கட்டப்படுகிறது.
முன்னதாக, பல்லடம் சாலை தென்னம்பாளையம் சந்தை அருகே தொடங்கி எம்.ஜி.ஆர். சிலை வரை கட்ட திட்டமிடப்பட்ட பாலம், தற்போது 350 மீட்டர் வரை மட்டுமே கட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்தப் பாலத்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி அரசு உத்தரவில் உள்ளதுபோல் கட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
டிராபிக் ராமசாமி தனது மனுவை, பிரதமர், தமிழக ஆளுநர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறை, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.