
தமிழகம் முழுவதும் 1000 புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை அரசு அகற்றியது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,321 டாஸ்மாக் கடைகள் இரவோடு இரவாக மூடப்பட்டன.
மேலும் புதிய கடைகளை இடம் தேர்வு செய்து திறக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுடன், கடையை சூறையாடுகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியாமல் டாஸ்மாக் அதிகாரிகளும் ஊழியர்களும் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை டாஸ்மாக் தலைமையிடத்தில், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் உதவி ஆணையர் கலால் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை சமாளித்து தமிழகம் முழுவதும் 1000 டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி எத்தனை கடைகள் திறக்கப்பட்டன, தற்போது இருக்கின்ற டாஸ்மாக் கடைகள் எவ்வளவு?, புதிய கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்களால் பாதிக்கப்பட்ட கடைகள் எத்தனை உள்ளிட்ட பல்வேறு விவரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.