
மத்திய அரசு மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி சில அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டமும், மாட்டிறைச்சி விருந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர் சூரஜ்குமார் என்பவர், மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிலர், அவரை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக மாணவர்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் கோட்டூர்புரம் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதைதொடர்ந்து போலீசார், மாணவன் சூரஜ்குமாரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஐஐடி மாணவர்கள் 8 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., மாணவர் மணீஷ் குமார் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில், சூரஜ் உள்ளிட்ட 2 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.