
விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் மற்றும் சலூன் கடைகளின் பின்புறம் சிலர் திருட்டுத்தனமாக சாராய பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
அங்கு சாராயம் குடிக்கும் குடிமகன்கள், போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி கிண்டல் செய்கின்றனர். இதுபற்றி போலீசில் பலமுறை புகார் செய்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டனர். ஆனால், அங்கு சமாதானம் பேச வரும் போலீசார், சாராய வியாபாரிகளிடம் கட்டிங் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் செல்வதாக அந்த கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், திருட்டுத்தனமாக சாராயம் விற்பனை கண்டித்து ப.வில்லியனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 50க்கு மேற்பட்டோர் சாராய பாக்கெட்டுகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாணவர்களை கலெக்டர் சுப்பிரமணியத்திடம் அழைத்து சென்றனர்.
அங்கு ப.வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.