
திருப்பூர்
ஜிஎஸ்டியை எதிர்த்து திருப்பூரில் உள்ள உணவு விடுதிகள், அடுமனைகள், மருந்து கடைகள் முழுவதுமாக மூடப்பட்டதால் தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகள் அம்மா உணவகம், மற்றும் அம்மா மருந்தகத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் நிலைமை ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தது.
இந்தியா முழுவதும் ஜூலை 1–ஆம் தேதி ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ரூ.50 இலட்சத்துக்கு குறைவாக வருமான ஈட்டும் உணவு விடுதிகளுக்கு 0.5 சதவீதம் விதிக்கப்பட்ட சேவை வரியை 5 சதவீதமாகவும், ரூ.50 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் உணாவு விடுதிகளுக்கு 2 சதவீதமாக விதிக்கப்பட்ட சேவை வரியை 12 சதவீதமாகவும், குளிர்சாதன வசதி கொண்ட ரெஸ்டாரண்டு உணவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வரி, 18 சதவீதமாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த வரி உயர்வு வருகிற ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த வரி உயர்வு உத்தரவுக்கு அனைத்து உணவு விடுதி உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல அகில இந்திய அளவில் ஆன்–லைன் மூலம் மருந்து விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ–போர்ட்டல்’ என்னும் எலக்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு, உணவு விடுதிகள் மீதான வரியை குறைக்கவும், ஆன்–லைன் விற்பனைக்கு தடை விதிக்கவும் கோரி தமிழகம் முழுவதும் உணவு விடுதி உரிமையாளர்களும், மருந்து வணிகர்களும் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து கடைகள் மற்றும், உணவு விடுதிகள் நேற்று அடைக்கப்பட்டன.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் உணவு விடுதிகள், அடுமனைகள் மிக முக்கியமானது. வெளி ஊர்களில் இருந்து இலட்சக்கணக்கானோர் இங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவு விடுதிகளிலேயே சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடி அம்மா உணவகங்களை படையெடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி கூறியது:
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி உள்பட அனைத்து பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், 2 ஆயிரத்து 500 அடுமனைகள் மற்றும் சிறிய உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 99 சதவீத கடைகள் நேற்று முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது” என்று அவர் கூறினார்.
இதேபோல மருந்து கடைகளும் மூடப்பட்டிருந்தால் தினந்தோறும் மருந்து உட்கொள்ளும் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். திடீரென மருந்து பொருட்கள் தேவைப்பட்டவர்கள் மருந்து கடைகளை தேடி அலைந்தனர்.
இந்த நிலையில் அம்மா மருந்து கடைகள் மட்டும் மாவட்டம் முழுவதும் திறந்து இருந்ததால் அங்கு மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதுகுறித்து மருந்து வணிகர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி கூறியது:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 900 மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அவசர நிலையில் நோயாளிகள் மருந்து வாங்குவதற்கு வசதியாக, மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
மேலும், தினசரி மருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நோயாளிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.