
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ஒரே இரவில் 13 செமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டு பறந்தது.
தரை இறங்க முடியாமல் பாதிக்கப்பட்ட விமானம்
மேலும் விமான ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கியதால் 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. வானிலை சீரானதும் விமானங்கள் சென்னைக்கு வர விமான நிலைய அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதே போல சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், அந்தமான், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக பன்னாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மழைநீரானது தேங்கி நின்றது. இதனால் கிண்டி, சைதாப்படேட்டை, வேளச்சேரி, தாம்பரம், உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கிண்டி கத்திப்பாரா பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து சேவையும் மாற்றப்பட்டது. இதே போல தி நகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் சிக்கியது. இதனிடையே மழை நீரை அகற்றும் பணியில் 2000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்