
சென்னை புரட்டி போட்டுள்ள நிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, அதேபோல இணைய சேவைகளும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் நேற்றும் சென்னையில் புறநகர் மின்சார ரயில் இயக்கப்படாத நிலையில் இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து வெளியூர்களுக்கு புறப்படவிருந்த 19க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் காலை 9 மணி முதல் மெல்ல மெல்ல துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும். இந்த சூழலில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இன்று சென்னை மாநகர பேருந்துகள் அனைத்து வழித்தடத்திலும் அதிக அளவில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கப்பட்டது.
மிக்ஜாம்.. உதவ களமிறங்கும் கோவை - பாதிப்புகளை சீரமைக்க சென்னை புறப்பட்ட 400 தூய்மை பணியாளர்கள்!
ஆனால் தற்பொழுது நிலை சீரடைந்து வருவதால் முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் பேருந்துகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக அளவில் கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.