
வள்ளியூரில் குற்றச்செயல்களை அரங்கேற்றி வரும் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க 30 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இனி ஒரு குற்றவாளியும் காவலாளர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும், தங்களின் அன்றாட தேவைக்காக வள்ளியூர் வந்துதான் செல்லவேண்டும் என்பதால் வள்ளியூர் பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
இதனால் இந்தப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகளவு நடந்தேறின. குற்றச் செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதது என்பது காவல்துறையினருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதனை தடுக்க காவல்துறையினரோடு வள்ளியூர் வணிகர் நலச்சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்தனர்.
அதன்படி, வள்ளியூரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமிரா அமைக்க முடிவு செய்து, வள்ளியூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், தினசரி சந்தை, முக்கிய பிரதானசாலை என 30 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
மேலும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடுக்க ஒன்பது இடங்களில் ஒலிப்பெருக்கிகளும் அமைக்கப்பட்டன.
இதன் தொடக்க விழா நேற்று வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்டத் துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் (பணகுடி) பர்னபாஸ், (கூடங்குளம்) சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் வரவேற்றார்.
மாவட்ட கண்காணிப்பாளர் விக்ரமன் கண்காணிப்பு கேமிரா மற்றும் ஒலிபெருக்கி வசதியைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள், மக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
விழாவின் இறுதியில் உதவி ஆய்வாளர் பிரபு பாஸ்கரன் நன்றித் தெரிவித்தார்.