
திருச்சியில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் நடமாடும் ஏ.டி.எம்கள் வைக்கப்பட்டன. இருந்தும், பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்கள் 9-வது நாளாக அவதியுற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி பிரதமர் அறிவித்தார். கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வங்கிகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களிலும் ஏராளமானோர் திரண்டு சென்று பணம் எடுத்து செல்கிறார்கள்.
ஆனால் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முன்பு பணம் எடுத்து செல்வதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவரவர் தங்களது வேலைகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. வங்கிகளின் வாசலில் நீண்டநேரம் காத்திருந்து சென்றாலும், ஒரு சில சமயங்களில் பணம் தீர்ந்துவிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதனால் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே. தினந்தோறும் வீடுகளில் காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், மளிகை சாமான்கள் வாங்க பணம் தேவைப்படுகிறது.
இதற்காக ஏ.டி.எம். மையங்களை முற்றுகையிட்டு பலர் பணம் எடுத்து வந்தனர். ஆனால் சில நாட்களாக திருச்சியில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அன்றாட குடும்ப செலவுக்குக்கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் உள்பட ஒரு சில இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம். மையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுக்க தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நீண்டவரிசையில் கால் கடுக்க காத்து இருக்கிறார்கள்.
இதேபோல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வணிக நிறுவனங்களிலும், காய்கறி கடைகளிலும் விற்பனை பெருமளவு குறைந்தது. திருச்சி பாலக்கரை, மெக்டொனால்டுசாலையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து இருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையில் நிறுத்தி சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.