
திருவாரூரில் இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்கிட கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்யக்கோரி திருவாரூர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பைரவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சௌந்தரராஜன் கோரிக்கையை விளக்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 8–வது ஊதியக்குழுவை உடனே அமல்படுத்திட வேண்டும்.
2016 ஜனவரி மாதம் முதல் இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்கிட வேண்டும். 2015 ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் புஷ்பநாதன், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன், புள்ளியியல் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மருத்துவத்துறை நிர்வாக அலுவலக சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.