
வேலூர்,
போலி பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கிறது என்று வதந்திகளை கிளப்பிவிடுறாங்க. அவற்றை நம்பவேண்டாம் என்று முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ஆம் தேதி மோடியால் அறிவிக்கப்பட்டது.
இதனால் பணத்தட்டுப்பாடு மட்டுமின்றி சில்லறை தட்டுப்பாடும் ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் வங்கிகளில் அதிக அளவில் கிடைப்பதால் பொதுமக்கள் சில்லறையின்றி பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், சில்லறை நாணயங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்களில் போலி நாணயங்கள் வந்துள்ளது என்று கூறி, கடைகளில் பல வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அல்லல்பட்டு வரும் நேரத்தில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்க மறுத்து வருவது மக்களை மேலும் சிரமப்படுத்துவதாக இருக்கிறது.
வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளுக்கு கொண்டுச் சென்றால் சில வங்கிகளிலும் நாணயங்களை வாங்க மறுப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் கூறியதாவது:–
“10 ரூபாய் போலி நாணயங்கள் எதுவும் கிடையாது. எனவே, புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்றும், பொருட்கள் வாங்கிக் கொண்டு அதற்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் வியாபாரிகள் தாராளமாக வாங்கலாம். பொதுமக்களிடம் அவர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.