மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு

By SG Balan  |  First Published Apr 3, 2024, 9:36 PM IST

எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியின் பேட்டி காமெடி டைம் போல இருந்தது என்றும் மத்திய அரசு வாழைப்பழ காமெடி போல பேசிவருகிறது என்றும் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Latest Videos

undefined

பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தீபஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்! நூற்றாண்டைக் கண்ட திருவண்ணாமலை நகராட்சியை “திருவண்ணாமலை மாநகராட்சி”-ஆக மாற்றிய உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன். பட்டுக்கும், அரிசிக்கும் பெயர் பெற்ற ஆரணிக்கு வந்திருக்கிறேன். இங்கு நடப்பது, எழுச்சிமிகு கூட்டம் என்று சொல்லவா! மாநாடு என்று சொல்லவா! அதையும் தாண்டி மாநில மாநாடு என்று சொல்லவா! திருவண்ணாமலையில் கடல் புகுந்துவிட்டது என்று சொல்லவா... என்பதைப்போல் கூடியிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

என்னையும் – உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ! அதேபோன்று, தி.மு.க.வையும் - திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. தி.மு.க.வுக்கு, திருவண்ணாமலை என்றாலே வெற்றிதான். முதன்முதலாக, தி.மு.க. 1957 தேர்தலில் போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களில் நூற்றாண்டு காணும், ப.உ.சண்முகம் உள்ளிட்ட ஆற்றல்மிகு உறுப்பினர்களைத் தந்த மண் இது! நாடாளுமன்றத்திற்குள் நாம் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, இரண்டு எம்.பி.க்கள் அதில் ஒருவரான, இரா.தர்மலிங்கம் அவர்களைத் தந்த மண் இது! இவர்களை மட்டுமல்ல, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை தொடங்கி… இன்று எதிலும் வல்லவராக விளங்கும் நம்முடைய எ.வ.வேலு உள்ளிட்ட எண்ணற்ற தளகர்த்தர்களைத் தந்துள்ள மண், இந்தத் திருவண்ணாமலை மண்! அதேபோல், தி.மு.க. வளர்ச்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்திருக்கிறார்கள்.

திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கான தொடர்பை நான் சொல்ல வேண்டும் என்றால், 1965 மொழிப்போருக்கு வித்திட்ட 1957-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்த இடம்! 1967 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருந்த 1963 இடைத்தேர்தல் வெற்றி கிடைத்த இடம்! 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணம் தொடங்கிய இடம் என்று, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், தி.மு.க.வும் - திருவண்ணாமலையும் சேர்ந்தே இருக்கும்! இப்போது இந்தியா கூட்டணி நாட்டினை ஆளப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் கட்டியம் கூறப்போகிறது!

திருவண்ணாமலை தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் சி.என்.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இந்தப் பெயரே போதும் வெற்றிக்கு! 1987-ஆம் ஆண்டு முதல் இளைஞரணியில் கட்சிப் பணி தொடங்கி, என்னுடைய தலைமையிலான இளைஞர் அணியில் அமைப்பாளராக இருந்தவர். தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்திருக்கும் இவரை, சென்ற தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில், வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து - கழகப் பணியையும், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்து - மக்கள் பணியையும்  சிறப்பாகச் செய்த இவரின் குரல், ஆரணியின் குரலாக டெல்லியில் ஒலிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக - உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன! வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காருங்கள்!

நான் எல்லாக் கூட்டங்களிலும் சொல்வது போன்று, இந்த தேர்தல்களம், இரண்டாவது விடுதலை போராட்டம்! இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அண்ணா சொல்லுவார்: “இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று, எங்கள் மனச்சாட்சி! இரண்டு, இந்த நாட்டு மக்கள்!” இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்களுக்காக மனச்சாட்சிப்படி நல்லாட்சி நடத்துபவன்!

தமிழ்நாட்டைப்போலவே, தில்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க – ஜனநாயகச் சக்திகளும் - இந்திய நாட்டு மக்களும் – களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக  இருக்கிறது!

நம் தமிழ்நாட்டை மதிக்கும் – நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும் - நம் இனத்தை – இனத்தின் பண்பாட்டை மதிக்கும் – எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட பிரதமரைத்தான், இந்தியா கூட்டணி நிச்சயம் வழங்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் – ஜனநாயகத்தை – தமிழ்நாட்டை – நாட்டின் எதிர்காலத்தை – இளைஞர்களை – மகளிரை – எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கும்!

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும்! ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்! வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும்! எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும்! அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்! நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும்! அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணாமலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல – தென்மாநிலங்களில் மட்டுமல்ல – வடமாநிலங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி – மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்!

அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்! அதேபோல், E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.யையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

மோடி அவர்களே… இது ஏப்ரல்தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்! பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார்! அதிலாவது உண்மையைப் பேசினாரா?

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் ’சபாஷ்’ போட்டிருக்கலாம்! கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.

ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே! பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதற்கு பதில் சொல்லவில்லை! அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள்! ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் - தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்... பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!

மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே… உங்களுக்குத் தெரியாதுதானே? டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார்களே… அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே… அதுவும் உங்களுக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் I.T. – E.D. – C.B.I. இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது! நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால் – நாளைக்கு உங்களுக்கும் - குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்! அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் – 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை! கேட்ட நிதியையும் தரவில்லை!

ஆனால் என்ன சொன்னார் தெரியுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார். சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.

அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அம்மையார் நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தினார் அந்த அம்மையார்!

ஆணவச் சிந்தனை கொண்ட அவர்கள் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார்கள். அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்…

பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே… ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லாமல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”

ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்! நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே... வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் - நக்கல் - நையாண்டி - கிண்டல் – கேலி என்று ஆணவமாகப்  பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை!

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் – சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர்தல்! மதவாதத்திற்கும் - மதச்சார்பின்மைக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. இழைக்கும் சமூக அநீதிக்கும் – சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கும் – ’இந்தியா’ என்ற கொள்கைக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! வெறுப்பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல்! அதை மனதில் வைத்துதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்! சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்! தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்! ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்! விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்! உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்! மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்! வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்! சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்! ஆரணி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்படும்! நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருக்கும் திண்டிவனம் முதல் நகரி வரையிலான இரயில் பாதைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும்! நெல், அரிசி வியாபாரிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்! பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – மாம்பழப்பட்டு - விழுப்புரம் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த தினசரி இரயில் பொதுமக்களுக்காக மீண்டும் இயக்கப்படும்!

இப்படி வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம் என்றால், தி.மு.க. என்றாலே, “சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!” 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தேன். அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி, ஒவ்வொரு மேடையிலும் அதைப் பட்டியலிட்டு வருகிறேன். சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொன்னால், அனைத்துக் கூட்டங்களும், “சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாக” ஆகிவிடும். அதனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளால் பயனடைந்தவர்கள் பற்றிச் சொல்கிறேன்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இருக்கும் நடுபடுகை என்ற ஒரு இடம்! இரண்டு ஆற்றுக்கு நடுவில் இருக்கும் அந்தப் படுகையில் 35 குடும்பங்கள்தான் வசிக்கிறார்கள். ஆற்றைக் கடந்து சென்று பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார். அந்த ஆயிரம் ரூபாய், படிப்பதற்குப் பயன்படுவது  மட்டுமல்ல, படிக்கும்போதே சம்பாதிப்பது போன்று, தனக்குத் தன்னம்பிக்கை பிறப்பதாகவும் சொல்லியிருக்கிறார். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகளான அவருக்கு மனதில் உருவாகும் தன்னம்பிக்கைதான், நாம் சொல்லும் விடியல்! இப்படிப்பட்ட திட்டங்களாக பார்த்துப் பார்த்து உதவிக் கொண்டு இருக்கிறோம்!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் பேசினார்.

click me!