
தஞ்சாவூர்
2012-ல் நீட் தேர்வால் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்ற முதல்வர் மோடி, இப்போது பிரதமரானதும் அவரே மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளார். அப்போ கசக்குது, இப்போ இனிக்குதா? என்று எ.வ.வேலு வெளுத்து வாங்கினார்.
இந்தியால் வரக் கூடிய ஆபத்தைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் இந்தியை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு, திமுக தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கொள்கைப் பரப்பு இணைச் செயலர் புதுக்கோட்டை விஜயா சிறப்புரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு பேசியது:
“ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
இதையறிந்த கேரள அரசு மலையாளத்தைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியால் ஆபத்து வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. இதைத் தடுக்க வேண்டும்.
நீட் தேர்விலும் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரிக்குள் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
அக்காலத்தில் சம்ஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்லூரிக்குள் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. அதை முறியடித்தவர் தந்தை பெரியார். இப்போது, அது நீட் தேர்வு வடிவில் வருகிறது. இதை தமிழர்களாகிய நாம் எதிர்ப்போம்.
மாநிலத்துக்கு மாநிலம் உணவு, உடை, பண்பாடு, மொழி, பாடத்திட்டம் வேறு என்பதால் நீட் தேர்வு தேவையில்லை என உச்ச நீதிமன்றம் 2013-ல் ரத்து செய்தது. இதை மோடி அரசு தேவை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டுவந்துள்ளது.
நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் உள்ளன. இவை அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் 98 சதவிதப் பள்ளிகள் மாநிலக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைச் சேர்ந்தவை. இதனால், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கடுமையாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தி பயிற்சி மையங்கள் ரூ.1 இலட்சம், ரூ.2 இலட்சம் என வசூலிக்கின்றன.
குஜராத்தில் கடந்த 2012-ல் மாநில அரசின் உரிமை பறிபோகிறது எனக் கூறி இதே நீட் தேர்வை அப்போதைய முதல்வர் மோடி ஏற்க மறுத்தார். இப்போது பிரதமராகிவிட்ட அவர் மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளார்.
இடஒதுக்கீடு, சமூகநீதி, மாநிலங்களின் உரிமை போன்றவற்றை மத்திய அரசு பறிக்க முயல்கிறது. எனவே, அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்” என்று அவர் பேசினார்.
உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திமுக தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மு.காந்தி, மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.