
பாப்பிரெட்டிப்பட்டி
“இபிஎஸை ஆதரித்த எம்எல்ஏ பழனியப்பனுக்கு கண்ணீர் அஞ்சலி” என்ற வாசகத்துடன் அவரது புகைப்படம் வாட்ஸ்-ஆப்பில் தீயாக பரவி வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கி விட்டு, முதல்வராக சசிகலா முடிவு செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை கிடைத்ததையடுத்து சசிகலா ஆலோசனைப்படி, அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக இடைப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பின் போது, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., பழனியப்பன் தொகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக, இடைப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
எனவே, அவரது தொகுதியில் உள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பழனியப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், வாட்ஸ்-ஆப்பில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு, அதில் அவருக்கு நாமம் போடப்பட்டு, கண்ணீர் அஞ்சலி, பழனியப்பன் எம்.எல்.ஏ. பாப்பிரெட்டிப்பட்டி என இருந்தது.
இது தர்மபுரி மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.