
பழனி அருகே ரேசன் அரிசி மற்றும் கோதுமை கடத்திய மதுரையைச் சேர்ந்த நான்கு பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேசன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கடந்த ஜனவரி 31-ஆம் தேதி சோதனையிடப்பட்டது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவலாளர்கள் மேற்கொண்ட இச்சோதனையின் போது 14 டன் ரேசன் அரிசி மற்றும் 36 மூட்டை கோதுமை கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவற்றைக் கைப்பற்றிய காவலாளர்கள், கடத்தலுக்கு காரணமாக இருந்த மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த க.தங்கபாண்டி (49) மற்றும் ப.சக்திவேல் (32), மதுரைச் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த த.மாரி என்ற பொன்னுச்சாமி (43), மதுரை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த தி.கணேசன் (37) ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரைத்தார்.
அதனையேற்று, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து, தங்கபாண்டி, சக்திவேல் உள்ளிட்ட நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.