லஞ்சம் ஊழல் தடுப்புத்துறைக்கு ஏன் டிஜிபியை நியமிக்கவில்லை - மு.க.ஸ்டாலின் கேள்வி

First Published Dec 23, 2016, 12:47 PM IST
Highlights


லஞ்சம் ஊழல் தடுப்புத்துறைக்கு ஏன் டிஜிபியை நியமிக்கவில்லை - மு.க.ஸ்டாலின் கேள்வி

லஞ்ச ஒழிப்புத்துறையை கையில் வைத்துள்ள தலைமைச்செயலாளர் ஊழலில் சிக்கியுள்ளார். ஆகவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிஜிபி அந்தஸ்த்தில் அதிகாரியை நியமிக்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த ஸ்டாலின் அறிக்கை: 

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை தலைமைச் செயலாளர் பி.ராம்மோகன ராவ் வீட்டில் நடந்திருக்கின்ற வருமானவரித்துறை ரெய்டு பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. அதை விடக் கொடுமை, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான்.

அதே போல், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த தலைவர் பதவி அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டு இன்றளவும் ஐ.ஜி. தலைமையிலான பதவியில் அந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஐ.ஜி. தலைமையில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறையால் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவரின் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் மீதோ, ஊழல் புகார்கள் மீதோ நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க, ஊழல்களை ஒழிக்கும் பணியில் மிக முக்கியமான அமைப்பான “லோக் அயுக்தா” அமைப்பை அமைக்க அதிமுக அரசு இதுவரை முன்வரவில்லை.

அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு தலைவர் பதவி ஆகியவற்றிற்கு ஆறு வருடங்கள் முழு நேர ஊழியர்களை நியமிக்காமல் வைத்திருந்ததைப் பார்க்கும் போது அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட “அரசு ஆலோசகர்கள்” பதவியே அர்த்தமற்றதாகியிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகின்ற அந்த அரசு ஆலோசகர்கள் எல்லாம் ஊழலைத் தடுக்க வேண்டிய இந்த நடவடிக்கைகள் குறித்து ஏன் ஆலோசனை வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!