
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வந்துள்ளார். பெங்களூருவில் இருந்து மசினகுடி வந்த அவர், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார். அதன்பின்னர், மைசூரு சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 7 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், இரவு அங்கு தங்கினார். இன்று காலை 9.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ராஜ்பவனில் உள்ள மைதானத்தில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.
அதன்பிறகு, அவர் அண்ணா பல்கலைக்கழகம் செல்லவுள்ளார், அங்கு நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் சிறப்புரையாற்ற உள்ளார். நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொடரும் ஐஏஎஸ் அமுதாவின் அதிரடி.. தமிழகத்தில் மேலும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்
விழா முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை செல்லும் அவர் மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பிற்பகல் 3.15 மணி முதல் 3.45 மணி வரை பழங்குடியின பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார். பின்னர் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
அதன்பின்னர், மாலை 7 மணியளவில் கிண்டி ராஜ்பவனில் நடக்கும் பாரதியார் படத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். அங்குள்ள தர்பார் அரங்கத்திற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரை அவர் சூட்டுகிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளையும் அவர் கண்டுகளிக்கிறார். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ரவி விருந்து அளிக்கவுள்ளார். இந்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். அழைப்பை கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதல்-அமைச்சரிடம் கொடுத்து உள்ளார். இதற்கான அழைப்பை ஆளுநரின் செயலாளர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து உள்ளிட்டவற்றை திமுக புறக்கணித்த நிலையில், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அளிக்கும் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, காலை 9.30 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார்.