காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாகப்பட்டினத்தில் ஆக.25இல் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Published : Aug 22, 2023, 04:45 PM IST
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாகப்பட்டினத்தில் ஆக.25இல் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

சுருக்கம்

காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற  உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம்: பெங்களூரு மாநகராட்சி அதிரடி!

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட அனைத்து கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaikunta Ekadasi: கோவிந்தா.! கோவிந்தா.! விண்ணை தொட்ட பக்தர்கள் முழக்கம்.! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.!
திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!